கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அவிநாசி சாலையில் ஏற்படும் வாகன நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ தொலைவிற்கு ரூ.1,791 கோடியில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதில் 300 கான்கிரீட் தூண்கள் அமைகிறது.

இந்நிலையில் மேம்பால பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன்,  அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள இறங்கு தளம், விமான நிலையம் அருகே உள்ள ஏறுதளம், இறங்குதளம் ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணியானது தற்போது 93 சதவீதம் முடிவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உப்பிலிபாளையத்தில் ஏறுதளம், கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்குதளம் பணிகள் நிறைவடைய உள்ளது.  மேலும் பீளமேடு பகுதியில் ரயில்வே மேம்பாலத்திற்காக 52 மீட்டர் நீளத்தில் இரும்பு காரிடர்கள் அமைக்க வேண்டும். இதற்கு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ரயில்வே அதிகாரிகளின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்ததும் இரும்பு காரிடர்கள் பொருத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும்.