கோவை அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2020ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

பாலமானது உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. இது 17.25 மீட்டர் அகலத்துடன், சுமார் 305 பில்லர்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டின் முதல் நீண்ட தொலைவுடைய மேம்பாலம் ஆகும். மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை முடிக்கப்பட்டு, வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

கோவையில் அக்டோபர் 9ம் தேதி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்காக வரும் முதல்வர், அன்று காலை கோல்ட்வின்ஸ் பகுதியில் அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ பெயரை முதல்வர் ஸ்டாலின்  சூட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பது, 2020 இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலம் திமுக அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த ‘அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால’த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ‘ஜி.டி.நாயுடு’  அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் எனக் கூறியுள்ளார்.