இன்று ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) எனும் அதிநவீன தொழில்நுட்பம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரின் உள்ளங்கையிலும் உள்ளது.
துவக்கத்தில் கோடிங் எனப்படும் கணினி மென்பொருள் தொடர்பான சில சவாலான பணிகளை சீராக செய்ய, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறைக்கு தேவைப்படும் கடுமையான பணிகளை எளிதாக்கி தர பயன்படுத்தப்பட்ட ஏ.ஐ., இன்று பள்ளியில் கொடுக்கும் வீட்டு பாடங்களை சிம்பிளாக முடிக்க, கைபேசியில் எடுத்த புகைப்படங்களை அழகாக்க என சாதாரண பல விஷயங்களுக்கும் பயன்பட்டு வருகின்றது.
இதற்கு மேல் ஒரு படி சென்று, மக்கள் பலரும் இன்று செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உடல்நலம் போன்ற சில முக்கியமானவற்றை பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு பதிலையும், பின்னர்முடிவுகளை கூட எடுக்கின்றனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு மனிதர்கள் பதில் தேடுவதில் உள்ள சாதகம், பாதகம் பற்றி பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை சமீபத்தில் நடத்தினர்.
அதில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து. ஐயர்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த 18 வயதிற்கு மேல் உள்ள 1,298 பேரிடம் அவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் சோர்வு எனும் சாதாரண உடல் பாதிப்பு முதல் தலையில் ரத்த கசிவு ஏற்படுதல் போன்ற பெரும் பாதிப்புகளில் ஒன்று ஏற்படுவதாக இருந்தால் அதற்கு அவர்களால் ஏ.ஐ. மூலம் தீர்வை வெற்றிகரமாக தேட முடிகிறதா என கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்தனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏ.ஐ. மூலம் தங்களுக்கு உள்ள பாதிப்பின் அறிகுறிகள் என்ன என்பதை விளக்கி கூறி, அது உண்மையிலேயே என்ன என்பதை கண்டறிய முயன்றபோது, ஏ.ஐ.யால் அவர்களுக்கு சரியான பதில்களை கொடுக்கமுடியவில்லை.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் ஏ.ஐ./ இன்டர்நெட் பயன்படுத்தியும் 50% பேரால் கூட தங்களுக்கு உள்ள பாதிப்புக்கு அடுத்து என செய்யவேண்டும் என சரியாக முடிவெடுக்க முடியவில்லை. சிலநேரங்களில் ஏ.ஐ. தவறான முடிவுகளை கொடுத்துள்ளது.
அப்படியென்றால், ஏ.ஐ.யில் குறைகள் உள்ளதா?
உன்மையை சொல்லவேண்டும் என்றால், அந்த அளவுக்கு குறை ஏ.ஐ.யிடம் இல்லை.
ஒருவருக்கு திடீரென தலையில் அதிக வலி ஏற்படுகிறது, அவருக்கு படபடப்பாக இருக்கிறது, மூச்சு விட முடியவில்லை என அதிகப்படியான தகவல்களை மனிதர்கள் உதவியில்லாமல் ஏ.ஐ. மென்பொருட்களிடம் சமர்ப்பித்தால் அவற்றால் 94% துல்லியமாக இது என்ன பாதிப்பு என கண்டுபிடித்து விட முடிகிறது.
அப்படியென்றால், இன்று சவால் ஏ.ஐ. இடம் இல்லை. ஏ.ஐ.யை திறமையாக பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.
“மனிதர்களுடன் உரையாடுவதில் மிக திறமையாக செயல்படும் ஏ.ஐ.க்கு கூட சவால்கள் இருக்கிறது,” என இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரு பீன் கூறியிருக்கிறார்.
ஏ.ஐ.க்கு இருக்கும் ஆற்றல் என்பது மிக பெரிதாக இருக்கலாம் ஆனால் அதை மனிதர்கள் பயன்படுத்துகையில் அது கொடுக்கும் தகவல் அந்த அளவுக்கு சீராக இருக்காது. ஏ.ஐ.க்குள் அறிவு ஏராளம் இருந்தாலும் மனிதர்களுடன் உரையாடும் போது அது எப்போதும் அப்படியே வெளிப்படாது என இந்த ஆய்வின் துணை ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக செயல்பட்ட ஆடம் மக்டி கூறியிருகிறார்.
எனவே ஆரோக்கியம் தொடர்பான கேள்விகள் எதுவாக இருந்தாலும் அதை சரியான மருத்துவர்களை நாடி பெறுவதே அன்றும், இன்றும் என்றும் சிறந்தது.
(இந்த ஆய்வு கட்டுரையின் பெயர் Reliability of LLMs as medical assistants for the general public: a randomized preregistered study. இது NATUREMEDICINE எனும் மருத்துவ ஜர்னலில் வெளிவந்துள்ளது.)
