கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, உக்கடம் பேருந்து நிலையம் அருகே  தீவுத்திடலில், இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது.

இதில் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து சிலையைத் திறந்து வைத்தனர். நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி அரங்கேற்றப்பட்டன.

மாநகரின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்த அசோகச் சக்கர சிங்கம் சிலை, நகரின் அழகுக்கு  மெருகூட்டுவதுடன், பொதுமக்களிடையே தேசியப் பற்றை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலையை நிறுவியுள்ள தனியார் நிறுவன உரிமையாளர் மகாபிரபு கூறும்போது, நாட்டிலேயே இந்த அளவு பிரம்மாண்டமான அசோகச் சக்கர சின்ன சிலை அமைக்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார்.