உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் பிரெஞ்ச் பிரைஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. ஆனால் இதை அடிக்கடி சாப்பிடுவது, நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை கணிசமாக உயர்த்தும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது.

டீக்கடையில் இருந்து உயர்ரக உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும், எளிதில் கிடைக்கும் பிரெஞ்ச் பிரைஸை தொடர்ந்து சாப்பிடுவது, நாம் நினைத்துப் பார்க்காத ஆபத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய இந்த நீண்டகால ஆய்வில், 40 ஆண்டுகளாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்யப்பட்டனர். ஆய்வின்  ஆரம்பத்தில் நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் இல்லாதவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வு அமெரிக்காவை அடித்தளமாக கொண்டு நடத்தப்பட்டது.

ஆனால் ஆய்வின் முடிவில் சுமார் 22,300 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்ச் பிரைஸ் சாப்பிட்டவர்களுக்கு, நீரிழிவு ஆபத்து 20 சதவீதம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே அளவு வேகவைத்த, சுட்ட அல்லது மசித்த உருளைக்கிழங்கை சாப்பிட்டவர்களுக்கு, நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், உருளைக்கிழங்கை அதிக வெப்பத்தில் பொரிப்பதால் அதன் கலோரி மற்றும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை பாதித்து, நீரிழிவு அபாயத்தை தூண்டும் எனவும் இந்த ஆய்வு விளக்குகிறது.

அதேசமயம், உருளைக்கிழங்கு உணவை முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை எனவும், ஆனால் பிரெஞ்ச் பிரைஸுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஆய்வு வலியுறுத்துகிறது.

உதாரணமாக, வாரத்திற்கு மூன்று முறை பிரெஞ்ச் பிரைஸுக்கு பதிலாக முழுதானிய உணவுகளைச் சேர்த்தால், நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 19 சதவீதம் வரை குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

வேகவைத்த அல்லது சுட்ட உருளைக்கிழங்கை அளவோடு சாப்பிடலாம். ஆனால் நீரிழிவு நோயை  தடுப்பதற்கான சிறந்த வழி முழுதானியங்களை உணவில் அதிகப்படியாக சேர்ப்பதே என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.