நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 40% பேர் தங்கள் நகரங்களில் பாதுகாப்பு இல்லை என்று உணர்வதாக தேசிய வருடாந்திர அறிக்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறியீடான நாரி 2025 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜய கிஷோர் ரஹத்கர், நாரி 2025 எனும் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு மதிப்பெண் 65% ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நகரங்கள் இந்த அளவுகோலை விட மிகவும் அதிகமாக அல்லது மேலே அல்லது கீழே அல்லது மிகவும் குறைவாக செயல்படுவதாக மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கைக்காக 31 நகரங்களில் 12,270 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த அறிக்கை, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 40% பேர் தங்கள் நகரங்களில் பாதுகாப்பு அற்றதாகவோ அல்லது அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்றும் உணர்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு பணியினர் இல்லாததால் இந்த பயம் அதிகரிக்கிறது. ஆய்வின்படி ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜோத்பூர் ஆகிய நகரங்கள் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களாகக் கருதப்படுகின்றன.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஐஸ்வால், கேங்டாக், இட்டாநகர் மற்றும் மும்பை ஆகியவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தேசிய சராசரி அளவை விட பெண்களின் பாதுகாப்பில் பின்தங்கியுள்ள 31 நகரங்களில் சென்னை 21வது இடத்தில் உள்ளது. வெறும் 8% பெண்கள் மட்டுமே சென்னையில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறியுள்ளனர்.
தெருக்களில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், முறைத்துப் பார்த்தல், பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் உடல் ரீதியான தொடுதல் போன்றவை அதிகளவில் நடைபெறுவதாக அறிக்கை கூறுகிறது.
இதனால் பல மாணவிகள் படிப்பை நிறுத்துவதாகவும், பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிடுவதாகவும் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் 7% பெண்கள் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதில் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கு இந்த ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 0.07% மட்டுமே பதிவாகியுள்ளது. இது உண்மைக்கு மாறானது என்று அறிக்கை கூறுகிறது.
அதேபோல பல பெண்கள் துன்புறுத்தல் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிப்பதில்லை. மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் என்ற அச்சம், சமூக அவமானம் காரணமாகவே அவர்கள் தயங்குகின்றனர்.
இந்த சம்பவங்களில் வெறும் 22% மட்டுமே அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 16% வழக்குகளில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 53% பேருக்கு தங்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கொள்கை உள்ளதா என்பது குறித்து தெளிவான புரிதல் இல்லை என்பது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுப் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் இரவில் பெண்கள் பாதுகாப்பு உணர்வில் சரிவு இருப்பதை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. 10 பெண்களில் 6 பேர் தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக உணர்வதாகக் கூறியிருந்தாலும், 40% பேர் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்று கூறியுள்ளனர். 91% பேர் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
அதேபோல 86% பெண்கள் பகலில் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இருட்டில் இந்த நம்பிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
