இந்திய இளைஞர்கள் வாரத்தில் 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் கூறியுள்ள கருத்து, விவாதத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேலை-வாழ்க்கை சமநிலை தொடர்பான விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. நீண்ட வேலை நேரம், இரவிலும், வார இறுதியிலும் வரும் வேலை நேர தொடர்புகள், எப்போதும் ‘ரீச்சபிள்’ ஆக இருக்க வேண்டிய கட்டாயம் போன்றவை, பெரும்பாலான அலுவலகங்களில் சாதாரணமாகி விட்டன. இந்த நிலையில், நாராயண மூர்த்தியின் கருத்து மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஒரு பேட்டியில் மூர்த்தி பேசும்போது, “சீனாவில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாள் வேலை செய்யும் 9-9-6 என்ற நடைமுறை உள்ளது. அதாவது 72 மணி வேலை நேரம். இந்திய இளைஞர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இவரின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல இளைஞர்கள், தாங்கள் ஏற்கனவே நீண்ட பயணம், அதிகரித்து வரும் செலவு காரணமாக சோர்வடைந்துள்ளதாகவும், வேலை நேரத்துக்கு பிறகு வரும் அழைப்புகள், மெயில்களால் தனிப்பட்ட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
பிரபல வேலை தேடும் தளமான இன்டீட், 2024ம் ஆண்டு நடத்திய வேலை-வாழ்க்கை சமநிலை ஆய்வின் படி, 88% ஊழியர்கள் வேலை நேரத்திற்கு பின்பும் தொடர்பு கொள்ளப்படுகின்றனர். 85% பேர் நோய் விடுப்பு அல்லது விடுமுறை எடுத்தாலும் தொடர்பு வருவதாக கூறியுள்ளனர். இதனால் தனிப்பட்ட நேரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, எரிச்சல் அதிகரித்து வருவதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 46.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. பாதிக்கும் மேற்பட்டோர் 49 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கின்றனர். இது ஐரோப்பிய நாடுகளின் வேலை நேரத்தை விட அதிகம் எனக் கூறியுள்ளது.
எக்ஸ் மற்றும் ரெட்டிட் போன்ற தளங்களில், “உலகில் பல நாடுகளில் வேலை-வாழ்க்கைக்கு சமநிலை வழங்கப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சம்பள நிலை உலகத் தரத்திற்கு உயர்த்தப்படாத நிலையில் நீண்ட நேரம் வேலை செய்யவேண்டும் எனக் கேட்பது பொருத்தமல்ல. இந்தியாவின் அன்றாட பொருளாதார சூழல், போக்குவரத்து சிக்கல்கள், வாழ்வாதாரச் செலவுகள் இவற்றை கருத்தில் கொள்ளாமல் ஒப்பீடு செய்வது தவறு.” என பலர் கூறுகின்றனர்.
மேலும், சீனாவில் கூட 9-9-6 நடைமுறைக்கு எதிர்ப்பு அதிகரித்திருப்பதாகவும், சட்டதரப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர்.
விவாதத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறி, அங்கு குறைந்த நேர வேலை, வார இறுதி விடுமுறை, மாலை நேரம் குடும்பத்திற்கும், தனிப்பட்ட வாழ்விற்கும் ஒதுக்கப்படுவது போன்றவை உற்பத்தித்திறனை உயர்த்துகின்றன என கருத்து தெரிவித்தனர்.
நியாயமான சம்பளம், திட்டமிட்ட வேலை நேரம், போதுமான ஓய்வு, மனநிலைச் சமநிலை, ஆதரவான மேலாண்மை, தனிப்பட்ட வாழ்க்கையை இழக்காமல் வளர்ச்சி வாய்ப்புகள் போன்றவை பணியாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களாக உள்ளன.
இந்தியா விரைந்து வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், வேலை அமைப்பில் மாற்றம் அவசியம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஊழியர்களின் தனிப்பட்ட எல்லைகள் மதிக்கப்பட வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் நாட்டிற்கு பங்களிக்கத் தயாராக உள்ளனர். வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலை தான் அவர்களுக்கு தேவையானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
