தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டுத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக நன்றி தெரிவித்து அவர் கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) கேசவ விநாயகம், விளையாட்டுத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் நயினார் பாலாஜி ஆகியோருக்கு நன்றி.

இது ஒரு பொறுப்பு மட்டுமல்ல; எனது திறன்களிலும், தமிழ்நாடு இளைஞர்கள் மீதான எனது அக்கறையின் மீதும் வைக்கப்பட்டுள்ள ஒரு மாபெரும் நம்பிக்கை.

அமெரிக்காவில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் பணியாற்றிய அனுபவமும், கடந்த இருபது ஆண்டுகளாக இளைஞர்களோடு நேரடி தொடர்பு கொண்டு பணியாற்றிய அனுபவமும் இருப்பதால், மாணவர்களை திறன் மேம்பாட்டில் முன்னேற்றவும், அவர்களின் முழுமையான வளர்ச்சியை உயர்த்தவும் என்னை அர்ப்பணித்துள்ளேன். விளையாட்டு மனப்பாங்கும், திறன் மேம்பாடும் முழுமையான வளர்ச்சிக்கான இரட்டை காரணிகள்.

பிரதமர் நரேந்திர மோடியின் “விக்சித் பாரத்” (முன்னேறிய இந்தியா) என்ற நோக்கத்தையும், கட்சியின் கருத்தியலையும் முன்னெடுத்துச் செல்ல என் முழு உழைப்பையும், ஆற்றலையும் செலுத்துவேன்.

மாணவர்களிடையே விளையாட்டை மேம்படுத்தவும், இளம் தலைமுறையின் முழுமையான முன்னேற்றத்திற்கு உதவும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தவும் முழு ஒத்துழைப்போடும், அர்ப்பணிப்போடும் பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.