டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 28வது ஆண்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் தலைமை விருந்தினராக கோவை கேப்ஜெமினி இன்ஜினியரிங் மூத்த இயக்குனர் சரவண குமார் பங்கேற்று பேசுகையில்: மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற தங்கள் கவனத்தை சரியான திசையில் திருப்பி, பணிகளை முன்னுரிமையுடன் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொள்வதோடு, அவற்றிற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் அவசியம். புதிய வாய்ப்புகள் மற்றும் சிந்தனைகளுக்கு திறந்த மனப்பாங்குடன் அணுக வேண்டும். மேலும், எந்தத் துறையிலும் முன்னேற்றம் பெற அடிப்படை அறிவு வலிமையாக இருக்க வேண்டும். அடிப்படைகள் வலுப்பெற்றாலே உயர்ந்த சாதனைகளை அடைய முடியும் என தெரிவித்தார்.

கௌரவ விருந்தினராக நான் முதல்வன் திட்டம், போட்டி தேர்வு, பணி இயக்குனர் சுதாகரன் கலந்துகொண்டு பேசுகையில்: மனிதர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதனை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல், அதிலிருந்து முக்கிய அம்சங்களைத் தேர்ந்தெடுத்து முன்னேறுதல் ஆகியவை வெற்றிக்கான அடிப்படைகள்.
அடிப்படை திறன்களை வலுப்படுத்துதல், ஆழமான கற்றல், திறமையான செயல்திறன் மற்றும் நடைமுறை அறிவு ஆகியவை இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதவை. கற்றதைக் களத்தில் பயன்படுத்தும் திறனே உண்மையான கல்வி. இன்றைய உலகில் வாய்ப்புகளும் தகவல்களும் அதிகமாக இருப்பதே சவாலாக உள்ளது. மாணவர்கள் தங்கள் முன்னுரிமைகளை தெளிவாக நிர்ணயித்து, சரியான வழிகாட்டிகளை அணுக வேண்டும் என்றார்.

தொடர்ந்து கல்வி மற்றும் இணை பாடத்திட்டத் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக மொத்தம் 103 மாணவர்களுக்கு சாதனை விருது வழங்கப்பட்டது. விழாவில், கல்லூரியின் இணை செயலர் & முதல்வர் கோவிந்தசாமி, என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
