தொடர்ச்சியாக மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது என்பது, புகையிலை பிடிக்காதவர்களிடையே கூட, நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்கிறது. இது தினமும் 20 முதல் 30 சிகரெட் புகைப்பதற்கு சமமான ஆபத்தை உருவாக்கிறது.

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது தற்போது தினமும் உயிர்களை பறிக்கும் சுகாதார நெருக்கடியாக மாறியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். நச்சு காற்று நுரையீரல், இதயம், குழந்தைகளின் மூளைகள் என அனைத்தையும் பாதிக்கிறது என பேட்டி ஒன்றில் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக டாக்டர் சௌமியா கூறியதாவது: காற்று மாசு இன்று இந்தியாவில் முக்கியமான சுகாதார ஆபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் இதய நோய், பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, புற்றுநோய் போன்றவை அதிகரித்துள்ளன. இது இந்தியர்களின் ஆயுட்காலத்தை குறைத்து வருகிறது.

இந்தியாவின் காற்றுத் தரம், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு அளவுகோல்களை விட மிகவும் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமானதாக உள்ளது.

தொடர்ச்சியாக மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது என்பது, புகையிலை பிடிக்காதவர்களிடையே கூட, நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்கிறது. இது தினமும் 20 முதல் 30 சிகரெட் புகைப்பதற்கு சமமான ஆபத்தை உருவாக்கிறது. குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் காற்று மாசுபாட்டின் தாக்கத்துக்கு மிக எளிதில் பாதிப்படைகின்றனர்.

அதிக மாசு உள்ள பகுதிகளில் வாழும் கர்ப்பிணிகளுக்கு, குறைந்த எடையில் குழந்தை பிறப்பு மற்றும் முன்கூட்டியே குழந்தை பிறக்கும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது நுரையீரல் வளர்ச்சியை மட்டுமல்ல, மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது.

பல ஏழ்மையான குடும்பங்கள் இன்னும் எரிபொருளாக மரக்கட்டைகள் அல்லது மாட்டுசாணம் போன்றவற்றை பயன்படுத்தி சமையல் செய்கின்றனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குள் தினமும் நச்சு புகையை சுவாசிக்கின்றனர்

உலகளாவிய காற்றின் நிலை 2024 அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1.7 லட்சம் குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். மாசு காரணமாக நீரிழிவு, நரம்பியல் கோளாறுகள் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் அபாயமும் அதிகரிக்கிறது.

எனவே, காற்று மாசு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தொடங்க வேண்டும். அதற்கு உறுதியான நிர்வாக அமைப்பு மற்றும் போதுமான நிதியுதவி தேவை. காற்று மாசுபாட்டை குறைப்பதன் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2 சதவீதம் வரை உயர்த்த முடியும் என்று கூறினார்.