செயற்கை நுண்ணறிவு கருவிகள் இன்று பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. தகவல்களைத் தேடுவதில் தொடங்கி பலவற்றிற்கு சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற ஏஐ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுய திறனை சார்ந்து இருக்கும் இடத்தில், ஏஐ மீது அதிகமாகச் சார்ந்திருப்பது சிந்தனை, நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றலை மெதுவாகப் பாதிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன.

ஏஐ உடனடியாக பதில்களை வழங்குவதால், ஒரு பிரச்சினையை நாமே ஆராய்ந்து சிந்திக்கும் பழக்கம் குறையக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பகுத்தறிதல், விமர்சன ரீதியான சிந்தனை மற்றும் சுயமாக முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏஐ சில நேரங்களில் தவறான அல்லது முழுமையற்ற தகவல்களையும் வழங்குகின்றன. இருந்தாலும், பல பயனர்கள் தங்களின் சொந்த அறிவையும், உள்ளுணர்வையும் விட ஏஐ பதில்களை நம்பும் போக்கு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக ஒரு தலைப்பைப் பற்றி குறைவாக அறிந்திருக்கும் நபர்கள், ஏஐ அளிக்கும் பதில்களைச் சரிபார்க்காமல் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஏஐ கருவிகளை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதையும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும் யோசனைகள் பல நேரங்களில் தரமானதாக இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று ஒத்ததாகவும், எளிதில் கணிக்கக்கூடியதாகவும் இருக்கக்கூடும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

மனிதர்கள் தாங்களாகவே சிந்தித்து உருவாக்கும் யோசனைகளுடன் ஒப்பிடும்போது, ஏஐ உதவியுடன் உருவாகும் கருத்துகளில் தனித்துவம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் ஏஐ-யை முழுமையாகச் சார்ந்திருப்பது புதிய சிந்தனையை  குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஏஐ ஒரு சக்திவாய்ந்த உதவிக் கருவி. ஆனால், அது மனித சிந்தனைக்கு மாற்றானது அல்ல. துணையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரை.

ஒரு பிரச்சினைக்கு முதலில் நாமே சிந்தித்து விடையை முயற்சிப்பது, அதன் பிறகு ஏஐயின் பதிலை ஒப்பிட்டுப் பார்ப்பது, கிடைக்கும் தகவல்களை நம்பகமான ஆதாரங்களுடன் சரிபார்ப்பது போன்ற பழக்கங்கள், ஏஐயின் நன்மைகளைப் பெறுவதோடு மனிதர்களின் சிந்தனைத் திறனையும் பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.