செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலைவாய்ப்புகளில் அதிரடி மாற்றங்கள் நிகழப் போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை எச்சரிக்கிறது. “ஜென்டர் ஸ்னாப்ஷாட் 2025” எனப்படும் இந்த அறிக்கையின்படி, ஏ.ஐ காரணமாக வேலை இழப்பில் பெண்களே அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பெண்கள் செய்துவரும் வேலைகளில் சுமார் 28 சதவீதம் செயற்கை நுண்ணறிவின் வரவால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன. ஆண்களின் வேலைகளில் இது 21 சதவீதம் ஆபத்தில் உள்ளன எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, எழுத்தர் மற்றும் நிர்வாகம் போன்ற பணிகளில் பெண்கள் அதிகமாகச் செயல்படுவதால், அவற்றில் தானியக்கம் (automation) எளிதில் புகுந்து விடுகிறது. இதுவே வேலை இழப்புக்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதிக வருமானம் உள்ள நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அங்கு வேலை செய்கிற பெண்களில் 9.6 சதவீதம் பேர் ஏ.ஐ காரணமாக தங்கள் பணியை இழக்கக்கூடிய அபாயத்தில் உள்ளனர். அதே சமயம் ஆண்களில் இது வெறும் 3.5 சதவீதம் தான். இதனால் பெண்கள் தொழில்சந்தையில் ஆண்களைவிட அதிக ஆபத்தைச் சந்திக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

தொழில்நுட்பத் துறையிலும் பாலின இடைவெளி பெரிய சவாலாகவே உள்ளது. உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் பெண்கள் 29 சதவீதம் மட்டுமே; தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அதைவிடக் குறைந்து 14 சதவீதம் தான் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், நகர்ப்புறங்களில் நடுத்தர மற்றும் உயர்கல்வி பெற்ற இளம் பெண்கள் வங்கி, நிதி, காப்பீடு, பொதுத்துறை போன்ற துறைகளில் அதிகமாகப் பணிபுரிகின்றனர். ஏ.ஐ இந்தத் துறைகளில் நுழைந்துவிட்டால், முதன்முதலில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்குகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் இந்த அறிக்கை, ஏ.ஐ பயன்பாடு சரியான கொள்கைகளுடன் இணைக்கப்படாவிட்டால், பாலின சமத்துவத்தில் பெரும் பின்தங்கலை உருவாக்கும் அபாயம் உள்ளதென வலியுறுத்துகிறது. தொழிலாளர் சந்தையில் ஏற்கனவே உள்ள திறன் இடைவெளிகள் பெண்களை அதிகமாகப் பாதிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.

ஆனால், செயற்கை நுண்ணறிவு சரியான முறையில் கையாளப்பட்டால் அது சமத்துவத்தை மேம்படுத்தும் கருவியாகவும் மாறக்கூடும். அதற்கு பாலின-உணர்திறன் கொள்கைகள், சமமான பயிற்சி வாய்ப்புகள், அனைவருக்கும் சமமான அணுகலை வழங்கும் தீர்மானங்கள் அவசியம் என்பதை ஐ.நா. வலியுறுத்துகிறது.

உலகம் புதிய சவால்களை எதிர்கொள்ளும் இந்த கட்டத்தில், முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பாலின சமத்துவமின்மை இன்னும் தீவிரமாகும் அபாயம் உள்ளது என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.