கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக உள்ளது. 10 நிமிடத்தில் இந்த மேம்பாலத்தை கடக்கலாம். ஆனால் உப்பிலிபாளையம் சந்திப்பிலும், கோல்டுவின்ஸ் கடந்து தொட்டிபாளையம் பிரிவிலும், பீக் ஹவர்ஸில் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் வாகனங்கள் அதிவேகமாக பயணிக்கின்றன.
இந்நிலையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க ஏ.ஐ கேமராக்கள் நிறுவப்படும் என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது: ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில், வாகன ஓட்டிகள் வேக வரம்பை மீறி செல்கிறார்களா என்பதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன.
இந்த கேமராக்கள், வாகனம் மேம்பாலத்தில் நுழையும் தருணத்திலிருந்து வெளியேறும் வரை அதன் வேகத்தை துல்லியமாக கண்காணிக்கும். நியமிக்கப்பட்ட வேகத்தை மீறி செல்கிறவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த பிரச்சினை பெருமளவில் சரியாகும்.
மேம்பாலத்தில் பயணம் செய்பவர்கள் சிலர் எந்த வழியில் இறங்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமடைவதாகவும், சில இடங்களில் சாலை குறியீட்டு பலகைகள் சரியான தூரத்தில் வைக்கப்படாததால் இது ஏற்பட்டதாகவும் விளக்கினார்.
இதனை சரிசெய்யும் வகையில், இறங்கும் இடங்களுக்கான கூடுதல் வழிகாட்டி பலகைகள் தற்போது 50 மீட்டர் முன்பே அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் புதிய பாதைக்கு பழகியதும், இந்த சிக்கல் முற்றிலும் தீர்ந்து விடும் எனத் தெரிவித்தார்.
