ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடைபெறுகிறது. இந்தாண்டு தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்கள் நடத்துகின்றன.

கோவை ஈஷா யோக மையத்தில், மேற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் பேரூர் மற்றும் சிரவை ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

ISHA 4

பேரூர் ஆதீனம் பேசுகையில், 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தலங்கள் தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதுபோலவே, இன்றைக்கு இந்த ஆதியோகி ரதங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி மக்களை ஆன்மீக செந்நெறிக்கு அழைக்கின்றன.

ஆற்றுநீர் கடலை நோக்கிச் செல்லும் போது, மீன்கள் எதிர்நீச்சல் போட்டு மேலே வருவது போல, இங்கிருந்து புறப்படும் ரதங்கள் மக்களை சிவராத்திரி பெருவிழாவை நோக்கி ஈஷா யோக மையத்துக்கு அழைத்து வரக்கூடிய உன்னதப் பணியைச் செய்கின்றன என்றார்.

சிரவை ஆதீனம் பேசுகையில், மார்கழித் திங்கள் இறைவனுக்குரிய சிறப்பு மாதம். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளை உளமாக எழுந்தருளச் செய்து வழிபடும் இந்த மாதம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற திருமுறைகள் வழியாக இறைவனை அடையும் நெறியை நமக்குக் காட்டுகிறது. இந்த ஆதியோகி ரத யாத்திரை மார்கழியிலிருந்து மாசி மாத சிவராத்திரி வரை தமிழகம் முழுவதும் பயணித்து, இல்லங்கள் தோறும் இறைவனுடைய திருவடியைச் சிந்திக்கச் செய்கிறது.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அருளாளர்களின் சிந்தனையைச் செயல்படுத்தும் உன்னத முயற்சியே இந்த ரத யாத்திரை. குருவின் திருவடியைப் பற்றிக் கொள்வதன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும். இல்லங்கள் தோறும் எழுந்தருளும் ஆதியோகியின் தரிசனம், மக்களின் பிறவிப் பயனை அடையச் செய்யும்.

தமிழகம் முழுவதும் பல திருத்தலங்களுக்கும் கிராமங்களுக்கும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரை, சிவபக்தி, திருமுறை மரபு மற்றும் ஆன்மீக ஒற்றுமையை மக்களிடையே மேலும் வலுப்படுத்தும் ஒரு மாபெரும் ஆன்மீக முயற்சியாக அமைந்துள்ளது எனக் கூறினார்.