கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் டேனி ஷெல்டர்ஸ் இணைந்து “வாங்க சிரிக்கலாம்” என்ற நிகழ்ச்சியை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு கே.பி.எம் பிளாட்டோ ரப்பர் கம்பெனி உரிமையாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஏஓன் சிப்ஸ், உரிமையாளர் முரளி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்புரையில் நடிகர் சிவகுமார் பேசுகையில்: எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டி, மழலை செல்வம் செய்யும் குறும்புகளை ரசிக்க வேண்டும். அவர்களின் பள்ளி ஆண்டு விழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
நான் பரபரப்பாக நடித்துக்கொண்டுருந்த காலத்தில், என் பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள நேரம் இல்லாமல் இருந்தேன். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் என் மகள் ஆசிரியர் பெற்றோர் கூட்டத்தில் கண்டிப்பாக வரவேண்டும் என கூறினார்.
இஷ்ட்டமில்லாமல், பள்ளிக்கு சென்ற போது என்னைப் பார்த்தவுடன் என் மகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. துள்ளி குதித்து மிகவும் சந்தோஷப்பட்டார். இந்த மகிழ்ச்சிக்கு மேல் எவ்வளவு பணம், பொருள் இருந்தாலும் அதற்க்கு ஈடாகாது என நினைத்தேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த அக்னிச்சாட்சி படத்தில் அரவிந்தன் கேரக்டர் மற்றும் சிந்து பைரவி படத்தில் ஜே.கே.பி கேரக்டரில் நடித்தது காலம் கடந்தும் பேசப்படுகிறது. நடிப்புக்கு பின் மகாபாரதம், இராமாயணம், திருக்குறள் என இதிகாசங்களை மேடையில் பேசியது என சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செல்வம் ஏஜென்சி உரிமையாளர் நந்தக்குமார், கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
