மேற்கு புறவழி சாலையில் நேற்று (13.2.26) காலை நடைபெற்ற சாலை விபத்தில் 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
புறவழி சாலை அருகில் உள்ள அறிவொளி நகர் சந்திப்பில் நடைபெற்ற இந்த விபத்திற்கு பின்னர், இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அறிவொளி நகர் – மேற்கு புறவழி சாலை இணையும் இடம் அருகே பாதுகாப்பாக வாகனங்கள் செல்ல அந்த சந்திப்பில் உயர்மட்ட பாலம் அல்லது சுரங்க பாதை போன்ற தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நேற்று காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், அப்பகுதியில், வாகன சுரங்கப்பாதை வேண்டும் என வலியுறுத்தி கேட்கப்பட்டதை அடுத்து மாநில நெடுஞ்சாலை துறையின் கோவை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி, நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், பொதுமக்களின் கோரிக்கையான வாகன சுரங்கப் பாதையை அமைக்கும் பணிக்கு ரூ.2.4 கோடி தேவைப்படும் எனவும் அதற்கான மதிப்பீட்டை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீடு மேலான நடவடிக்கைக்கு நெடுஞ்சாலைத்துறை இடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது!
அறிவொளி நகர் சந்திப்பில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தெருவிளக்குகள் ஆகியவை நிறுவப்படும் எனவும் அங்கு சாலை பாதுகாப்பு வேலைகள் முடியும் வரை அந்த இடம் பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து பாதுகாப்புகளும் உறுதி செய்யப்பட்ட பின்னர் சாலையானது பொது போக்குவரத்திற்கு திறக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அறிவொளி நகர் சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தேவைபடும் பாலத்திற்கான பிரேரணை (முன்மொழிவு), மேல் நடவடிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
