வெளிநாடுகளில் உயர்கல்வி கற்கவோ அல்லது வேலை கிடைத்தோ அங்கேயே தங்கும் வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோலவே சொந்த மண்ணின் சுவைக்குறையாத உணவு கிடைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

அமெரிக்காவின் மிக பிரபலமான நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் தமிழ்நாட்டின் கிராமிய சமையலுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பற்றி அறிந்தால், இன்றைய பிசியான நேரத்தில் சில மணி நேரம் ஒதுக்கி நீங்களும் பாட்டி சமையலை மீண்டும் ஒருமுறை ருசிக்க விரும்புவீர்கள்.

ரோனி மற்றும் சின்டன் பாண்டியா எனும் 2 இந்தியர்கள், இந்தியாவின் பல்சுவை உணவுகளை வழங்கும் பல உணவகங்களை நியூயார்க் நகரில் துவங்கி நடத்தி வந்தனர். அப்போது, ஒருநாள் தமிழகத்தை சேர்ந்த சமையல் வல்லுநர், செப். விஜயகுமாரை சந்தித்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த விஜயக்குமார்,  தனது தாத்தா – பாட்டியுடன் வசிக்க அடிக்கடி மதுரை செல்வார்.  அங்கு அவர்களுடன் விவசாயம் செய்வது, குளத்தில் மீன் பிடிப்பது என பொழுதைபோக்கிய பின்னர், பாட்டி சமையலுக்கு காத்திருப்பார்.

பாட்டி வைத்து கொடுத்த காரசாரமான நத்தை குழம்பு, அங்கு அவர் சாப்பிட கிராமத்து அசைவ விருந்துகள் எல்லாமே ஒரு நாள் அவரை நியூயார்க் அழைத்து செல்லும் என அவர் எதிர்பார்த்திருப்பாரா என தெரியவில்லை. ஆனால், இவையே இன்று நியூயார்க்கில் மக்கள் மனம் வென்ற உணவுகளாக உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

விஜயகுமாரின் சமையல் கல்வி, அனுபவத்தை தாண்டி கிராமிய உணவுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பெரிதாக கருதிய ரோனி மற்றும் சின்டன் பாண்டியா, அவரை செஃப் ஆக கொண்டு அவரின் தலைமையில் ஒரு தென்னிந்திய சிறப்பு உணவகத்தை ஆரம்பிக்க விரும்பினர்.

செய்யும் உணவை சிறப்பாக செய்யவேண்டும், சாப்பிட்ட அனைவரும் ‘செம்ம’ என சொல்லவேண்டும் என விரும்பிய அந்த மூவருமே இந்த புது உணவகத்திற்கு ‘செம்ம’ (Semma) என பெயரிட்டு 2021ல் தங்களது புதிய பயணத்தை துவங்கினர்.

உணவகத்தின் வெளிப்புறம், நிர்வாகத்தை ரோனி, பாண்டியா பார்த்துக்கொள்ள, சமையலை விஜயக்குமார் பார்த்துக்கொண்டார். கோவையில் பிரபலமான துரித உணவான காளான் முதல் காரசாரமான இறால் தொக்கு, கன்னியாகுமரி நண்டு மசாலா என அமெரிக்க-வாழ் தமிழர்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும், புது வகை உணவை ரசித்து உண்ணவிரும்பும் நியூயார்க் மக்கள் அனைவர்க்கும் ‘செம்ம’ செம்மையான விருந்து வைத்தது.

சீரக சம்பாவில் செய்த திண்டுக்கல் பிரியாணி, முயல் பிரட்டல், குடல் வறுவல், மாட்டு இறைச்சி சுக்கா என விதவிதமாக, மண்மணம் மாறாத பாரம்பரிய சுவையில் சமைத்து கொடுத்தார். மெனுவில் பெயர் கூட தமிழ் முறைப்படியே தான் இருந்தது. கேரளா மற்றும் பிற தென்னிந்திய உணவுகளுக்கும் அவற்றின் இயல்பான பெயரே வழங்கப்பட்டது ‘செம்ம’ உணவகத்தில்.

HOtel 2

வெளிநாடுகளில் உருவான உணவு வகைகளின் பெயரை நாம் மாற்றாமல் அதை அவ்வாறே பீசா, பர்கர் என அழைக்கும் போது, நமது நண்டு வறுவல், குடல் வறுவல் பெயரை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ளவேண்டும் என எண்ணி, உணவின் சுவை மட்டும் அச்சு அசல் நம் ஊர் ஸ்டைலில் இருக்காமல், பெயரும் அப்படியே இருக்கவேண்டும் என விரும்பினார். இதை ரோனி மற்றும் பாண்டியா முற்றிலுமாக வரவேற்றனர்.

இன்று நமது ஊரில் உள்ள பல உணவகங்களில் இட்லி-சாம்பார் சாப்பிட்டாலும், பிரியாணி-புலாவ் சாப்பிட்டாலும் ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது நாகரீகம் என கருதப்படுகிறது. சிலருக்கு அது சௌகரியமும் கூட. ஆனால் இந்த புகழ்பெற்ற உணவகத்தில் நீங்கள் வெறும் கைகளை கொண்டு  சாப்பிடலாம். சில உணவு வகைகளை கைகளில் சாப்பிடும்போது தான் நிறைவு கிடைக்கும்.

யாரோ சிலர் உருவாக்கிய வளையத்துக்குள் நாம் ஏன் வளைந்துபோக வேண்டும்? நாம் நாமாக இருப்போம் என விரும்பி, உணவை கிராமிய தன்மை மாறாமல் வழங்கிய செம்ம உணவகத்துக்கு வானளவு பாராட்டுக்கள் காத்திருந்தன.

2025ல் நியூயார்க் நகரின் சிறந்த 100 உணவகங்கள் பட்டியலில் முதல் இடத்தை ‘செம்ம’ பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த உணவகம் சர்வதேச உணவு துறையில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான மிஸ்ஸலின் ஸ்டார் மதிப்பீடை பெற்றது.

விஜயகுமாரின் ஊர் பக்கம் நத்தை குழம்பு என்பது ஏழை மக்கள் உண்ணக்கூடிய உணவாக கருதப்பட்ட போது, சமையல் கல்லூரியில் அவர் பயின்ற போது, நத்தையை கொண்டு செய்யப்படும் ‘எஸ்கார்காட்’ என்பது பிரான்ஸ் நாட்டில் ஆடம்பர உணவு என தெரிந்ததும், அதிலிருந்து தனக்கான ஒரு தன்னம்பிக்கை பாடத்தை அவர் எடுத்துக்கொண்டார்.

ஏழைக்கென ஒரு உணவும், பணக்காரர்களுக்கு ஒரு உணவும் இல்லை. உணவு உணவே, அது ஆற்றல் மிக்கது, என சொல்லும் இவர் 2025ல் உணவு துறையின் ஆஸ்கர் விருது என கருதப்படும் ‘ஜேம்ஸ் பியர்ட’ விருதை சிறந்த செப் பிரிவில் பெற்றார்.