கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை ஈரோட்டில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலிருந்து 6 ஆதியோகி தேர்களுடன் கோவை வெள்ளியங்கிரியை நோக்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வரவுள்ளனர்.
ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான ஆதியோகி ரத யாத்திரை கோவை ஆதியோகி முன்பு துவக்கி வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை டிசம்பர் 11-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அதேபோல் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 22-ஆம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், அந்தியூர் ஆகிய இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது. ஈரோட்டில் ஜனவரி 14 முதல் 16 வரையிலான மூன்று நாட்களில் பெரிய மாரியம்மன் கோவில், ஒயாசிஸ் ரெஸ்டாராண்ட், ஈஷா நர்சரி மற்றும் கணபதி பாளையம் உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் வலம் வர இருக்கிறது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா அதே நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது . அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.