கோவையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், காலையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. மேலும், முக்கிய சாலை சந்திப்புகளில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் சரிவர முடிக்கப்படாமல் இருப்பதாலும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப் படுகின்றனர்.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல மாதங்களாக நடந்து வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் கடும் தேசம் அடைந்துள்ளது. ஏற்கனவே, சாலைகளில் உருவாக்கி இருக்கும் சிறிய பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்குத் தலைவலியாக இருக்கிறது. குறிப்பாக, விளாங்குறிச்சி, காளப்பட்டி, கணபதி – சக்தி சாலை, சங்கனூர், இராமநாதபுரம் – திருச்சி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்குப் பொறுமை மிக அவசியம்.
காலை 8 மணி முதல் தொடங்கும் வாகன நெரிசல் பீக் அவர்களில் கடுமையாக உள்ளது. மழைக் காலங்களில் சொல்லவே வேண்டாம். சாலைகளில் தேங்கிய தண்ணீரில் பள்ளங்கள் இருப்பதே தெரியாமல் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. அதோடு, மாநகராட்சி பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் நீர் தேங்கிச் சேரும் சகதியுமாகக் காட்சி அளிக்கிறது. இதனால், காலையில் பணிக்குச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகிறது.
வாகன ஓட்டிகள், ‘மாநகராட்சி தரப்பில் தொடங்கப்படும் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஏற்கனவே, பல ஆண்டுகளாக நடந்து வரும் மேம்பாலம் பணிகளால் அவதிப்பட்டு வருகிறோம். மழைக் காலம் தொடங்கி விட்ட நிலையில் மேலும் சிரமப்படுகிறோம். விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.