கோவையில் கடந்த சில தினங்ககளுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வளர்ப்பு நாய் கடித்து, மூன்று மாதங்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் செல்லப்பிராணி பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்க்கு தொடர்ந்து ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் நாய் கடித்தாலோ பிராண்டிணாலோ கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்கிறார் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா. இது தொடர்பாக சமூக வலைத்தள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

வளர்ப்பு நாய்கள் குழந்தைகளையோ அல்லது வளர்ப்பவர்களையோ வாய் கண் உள்ளிட்ட பகுதிகளில் நக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. நாயின் எச்சிலில் ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு. தடுப்பூசிப் போட்டு பராமரித்து வரும் செல்லப் பிராணிகளை, தடுப்பூசி போடாமல் சுற்றி வரும் தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாய்க்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட அதற்கு ரேபிஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி சரியாக தூண்டப்படாமல் இருந்தால் அதனிடம் ரேபிஸ் வைரஸ் தொடர்ந்து வாழ்ந்து வரும். எனவே கவனம் தேவை. முப்பது முதல் நாற்பது சதவிகிதம் நாய்களிடம் ரேபிஸ் வைரஸ் சாதாரணமாகவே காணப்படுகிறது. எனவே நாய்க்கடி, பூனைக்கடி, நகக் கீறல் போன்றவற்றை சாதரணமாகக் கடந்து செல்லக் கூடாது.

கடித்த இடத்தில் ரத்தம் வந்து விட்டால் அது மூன்றாம் நிலை கடியாகும். இதற்கு ரேபிஸ் தடுப்பூசியுடன் கூடவே இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி எதிர்ப்பு சக்தி மருந்தை கடிபட்ட இடத்தில் ஊசியாக செலுத்த வேண்டும். ரேபிஸ் மரணங்களுள் சில இந்த இம்யூனோகுளோபுளின் சரியான நேரத்தில் போடப்படாமலும் நடக்கிறது. ரத்தம் வராத கடிகளுக்கு இரண்டாம் வகை எனப்படும். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி மட்டும் போதுமானது.

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளிலும்ரேபிஸ் தடுப்பூசியைப் பெறலாம். தயவுகூர்ந்து நாய்க்கடி அது செல்ல நாய்க்கடியாக இருந்தாலும் சரி.. அந்த விலங்குகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி சரியாக வழங்கப்பட்டிருந்தாலும் சரி..கடிபட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்கிடுங்கள் அசட்டை செய்யாதீர்கள் ரேபிஸ் 100 சதவீதம் உயிர்க்கொல்லி நோயாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.