வடகோவை-மருதமலை சாலை பகுதியில், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சூயஸ் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வடகோவை-மருதமலை சாலையில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட இச்சாலையில் மொத்தம் 9.15 கி.மீ. தூரத்திற்கு பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டன. இதில் இதுவரை 7.35 கி.மீ. தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்து, அந்தப் பகுதிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2a 11 scaled

இதனைத் தொடர்ந்து, வடகோவை- மருதமலை சாலையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 9.15 கி.மீ. தூரத்திற்கு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக கோவை மாநகராட்சி சார்பில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.11.60 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளைப் புதுப்பித்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணிக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.