கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்திடும் வகையில், சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் பழுதடைந்த சாலைப் பகுதிகளைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதாலும், தொடர் வாகனப் போக்குவரத்தாலும் ஏற்படும் சாலைச் சேதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றிப் பயணம் மேற்கொள்ளவும் தேவையான சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சாலைப் பள்ளங்கள் மற்றும் பழுதடைந்த பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு அதிக இடையூறு ஏற்படுத்தும் சாலைப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்கும் பணிக்காக 1,846 இடங்களில் 28,733 சதுர மீட்டர் எடுக்கப்பட்டு, 605 தார் சாலைகள் 11,255 சதுர மீட்டர் தார் சாலைகள், பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
