கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்விக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா, கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
புத்தாக்கக் கண்காட்சியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாணவர்களின் படைப்பாற்றல், உருவாக்கத் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதுமையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வித்யா தலைமை வகித்தார். கோவை சகோதயா பள்ளிகளின் தலைவர் நவமணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பங்கேற்ற அனைத்துப் பள்ளிகளுக்கான ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையை, துடியலுார் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது.
