மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் போலீசார் நடத்திய தீவிர சிறப்பு சோதனையில், 1,235 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். குற்றச் செயல்களில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி மேற்பார்வையில், 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இந்த சிறப்பு சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கண்காணிப்பு, போதைப்பொருள் தடுப்பு, முன்தண்டனை குற்றவாளிகள் தணிக்கை மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனையின்போது, 1,235 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், 1,111 பேர் மீது நன்னடத்தை பிணையம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற குற்றவாளிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தொடர்பான முந்தைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 265 பேரிடம் போலீசார் விசாரணை மற்றும் தணிக்கை மேற்கொண்டனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய முன்தண்டனை குற்றவாளிகள் மற்றும் பிணையில் வெளியே வந்தவர்கள் என மொத்தம் 441 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறப்பு வாகனத் தணிக்கையின்போது, மது போதையில் வாகனம் ஓட்டிய 684 பேர் மீதும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 208 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 150 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் அதனால் உருவாகும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பொது இடங்களில் மது அருந்தியதாக 786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 806 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்தில் குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கொலை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.