பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பு சார்பில் நடைபெற உள்ள 23 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில், இந்திய அணியின் சார்பில் பங்கேற்க ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சித்தரஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய ஏழு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இச்சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், இந்திய அணியின் சார்பில் பல்வேறு தடகளப் பிரிவுகளில் மொத்தம் 95 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிகள் வரும் நவம்பர் 25 முதல் 27ம் தேதி வரை ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. இதில் நீளம் தாண்டுதல் பிரிவில் பங்கேற்க சித்தரஞ்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மாணவரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.