அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கோவையில் மழைக்கான வாய்ப்பு உள்ள நிலையில், அனைத்து விதத்திலும் மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை திட்டம் இன்று தமிழ்நாடு முழுதும் துவங்கியது. கோவையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதை தெரிவித்தார்.
வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு திட்டத்தின் கீழ் 3 நாட்களுக்கு (5.11.26 முதல் 7.11.26 வரை) தமிழகம் முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு காய்கறி தொகுப்பில் 500 கிராம் பெரிய வெங்காயம், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்தரிக்காய், 250 கிராம் உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு தேங்காய் என மொத்தம் 10 வகையான காய்கறிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பின் மொத்த எடை 2.55 முதல் 2.60 கிலோ வரை இருக்கும்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், பண்டிகை காலத்தில் காய்கறிகளை சீரான முறையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 13 நம்ம இந்த தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக கூறினார்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, கோவை மாநகராட்சி பகுதியிலும் ஊரகப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மழை தாக்கம் ஏற்படும் இடங்கள் கண்காணிப்பட்டு வருகிறது என கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.
நேற்று (4.11.26/புதன்) இரவு கோவையின் சில பகுதிகளில் மழைப் பெய்துள்ளது. அந்த பகுதிகளில் உடனுக்குடன் துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கேயெல்லாம் நீர் தேக்கம் ஏற்படுகிறதோ அங்கே உடனுக்குடன் வெளியேற்றி வருகின்றனர்.
அடுத்த 2-3 நாட்களுக்கு கோவையில் மழைபெய்ய சாத்தியம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், அனைத்து வகையிலும் இந்த மழைக்காலத்தில் நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம். எங்காவது தண்ணீர் தேங்கினால் அதை உடனுக்குடன் அகற்றுவதற்குண்டான நடவடிக்கையை எடுக்க நாம் தயாராக இருக்கிறோம், எனவும் அவர் கூறினார்.

