அகில இந்திய தீவிர சிகிச்சைக் கழகத்தின் கோவை கிளை சார்பில், அகில இந்திய தீவிர சிகிச்சைக் கழக நாள் விழா கோவையில் நடைபெற்றது. இதில் அடிப்படை உயிர்காக்கும் முதலுதவிப் பயிற்சி மற்றும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: கடந்த 28 ஆண்டுகளாக கோவை கிளை ஆற்றி வரும் மருத்துவச் சேவைகளையும், வளர்ச்சிப் பணிகளையும் பாராட்டினார். கோவையை முக்கிய மருத்துவ மையமாகவும், வெளிநாட்டினர் வந்து சிகிச்சை பெறும் மருத்துவச் சுற்றுலாத் தலமாகவும் உயர்த்துவதில் கழகத்தின் பங்களிப்பு சிறப்பானது என்றார்.
மேலும், அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியைத் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகளிலும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரியின் தீவிர சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் செல்வராஜன் பேசுகையில், உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்றார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
கோவை கிளைச் செயலாளரும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவருமான டாக்டர் விவேகானந்தன், கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் கோவை கிளையின் வளர்ச்சி குறித்துப் பேசினார்.
கோவை கிளையின் முன்னாள் தலைவரும், ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவருமான டாக்டர் சிவகுமார் உள்ளிட்ட கோவையைச் சேர்ந்த மருத்துவர்கள், அகில இந்திய அளவில் கழகத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிப்பது கோவைக்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டார்.

கோவை கிளைத் தலைவரும், கோவை மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவருமான டாக்டர் கோபிநாதன், பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் ஆரம்ப அறிகுறிகள், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் மற்றும் தாமதமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, ராயல் கேர் மருத்துவமனையின் மூத்த தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் லட்சுமிகாந்த் சரண், திடீரென இதயம் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவருக்கு உடனடியாக நெஞ்சில் அழுத்தம் கொடுத்து உயிரைக் காப்பாற்றும் முறையைச் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவையின் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 100 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மனித உடலைப் போன்ற வடிவமைப்பில் உள்ள பயிற்சிப் பொம்மைகளைக் கொண்டு, ஆசிரியர்களுக்கு நெஞ்சழுத்தம் வழங்கும் முறையைத் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும், சுவாச சிகிச்சை நிபுணர்களும் நேரடிப் பயிற்சியாக வழங்கினர்.
