கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றவும், பொதுமக்களின் இயல்பான நடமாட்டத்தை உறுதி செய்யவும் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, ஜேசிபி, பாப்கேட் இயந்திரங்கள், சகதி உறிஞ்சும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மற்றும் மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல் மற்றும் வடிகால் அடைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், மாநகர நல அலுவலர், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் களத்தில் நேரடியாக ஈடுபட்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணித்து, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் சுரங்கப்பாதைகள் மற்றும் மண்டல, வார்டுப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு அமைப்புகள் வாயிலாக நிலவரங்கள் கண்காணிக்கப்பட்டது. மழைநீர் தேங்குதல் அல்லது போக்குவரத்துப் பாதிப்பு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாநகராட்சி ஆணையாளருடன் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மழைநீரை விரைந்து வெளியேற்றவும், தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் நீர்வழித் தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில், தேங்கிய நீரை அகற்றுதல், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் சுகாதார விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

மழைநீர் தேக்கம் மற்றும் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களுக்கு: தொலைபேசி / வாட்ஸ்அப்: 8190000200