இளைஞர்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளவும், மக்கள் பிரதிநிதியின் பணிகள் மற்றும் சமூகப் பொறுப்புகளைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் முன்னெடுத்துள்ள கே.ஜி.எப் திட்டம் தொடங்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், ஆறு மாத காலம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து பயணித்து, மக்கள் பிரதிநிதியின் அன்றாடப் பணிகள், தொகுதி மக்களின் கோரிக்கைகள், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள உள்ளனர். முதற்கட்டமாக, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அடையாள அட்டைகள், பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த ஆறு மாத காலப் பயிற்சியின் வாயிலாக, அரசு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, பொதுமக்களின் பிரச்சினைகள் எவ்வாறு அணுகப்படுகின்றன, அவற்றுக்கான தீர்வுகளைப் பெறுவதில் மக்கள் பிரதிநிதியின் பங்கு என்ன என்பன போன்றவற்றை இளைஞர்கள் நடைமுறை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
நிகழ்வில் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது: இந்த பயிற்சி, தமிழகத்தில் அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், மக்கள் பிரதிநிதியின் பணிகள் என்ன என்பதையும் இளைஞர்கள் நேரடியாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஒரு குடிமகனாக நமக்கு என்னென்ன சமூகப் பொறுப்புகள் உள்ளன என்பதையும், சமூகத்தின் வளர்ச்சியில் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இளைஞர்களிடம் ஏராளமான கனவுகளும் புதிய சிந்தனைகளும் உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
