கோவை கொடிசியா வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த மண்டல மாநாடு நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிராமப்புற வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாநாட்டில் அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் சுகுமார், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த்: 2026 – 27ஆம் ஆண்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

15 a 3 scaled

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கைப் பணிகளை முடிக்க வேண்டும்.  குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், மழைக்கால அவசரத் தேவைகளுக்கான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், பொதுமக்களின் மனுக்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியாகும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வட்டார அளவிலேயே தீர்வு காண வேண்டும்.

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படையாக நடைபெறுவதுடன், வளர்ச்சிப் பணிகளின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்கக்கூடாது. அரசு அலுவலர்கள் நேர்மையுடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்றார்.