மலைக்காடுகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் செம்மண் கலந்து செந்நிறத்தில் ஓடுகிறது. இதனால் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீண்ட மாதங்களுக்குப் பிறகு பெய்த கனமழையால் மலைக்காடுகளில் இருந்து செம்மண் மற்றும் சகதிகள் மழைநீருடன் அடித்துவரப்பட்டன. இதன் காரணமாக பவானி ஆற்றில் ஓடும் வெள்ளநீர் செந்நிறமாக மாறியது. ஆற்று நீரில் அதிகளவில் மண் கலந்ததால், அதை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் குடிநீர்த் திட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையங்களில் ஆற்று நீருடன் அதிகளவில் மண் கலந்து வந்ததால், நீரேற்று நிலைய மோட்டார்களும் பழுதடைந்தன. அவற்றைச் சீரமைத்து நீரேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், செம்மண் கலந்த நீரை முழுமையாகச் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரும் செந்நிறத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நீரை வழக்கம்போல் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி, வடிகட்டிப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளன.