“நாம் நமக்கான உணவையோ, நமது குழந்தைகளுக்கான உணவையோ உண்ணவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைகளுக்குச் சொந்தமான உணவை நாம் உண்டு கொண்டிருக்கிறோம். இது சரியானதல்ல. எனவே, தயவுசெய்து மண் வளத்தை மேம்படுத்த துரிதமாகச் செயல்படுங்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற ‘விழிப்புணர்வான உலகைக் கட்டமைத்தல்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்குரு, உலகளவில் மண் வளம் வேகமாகச் சீரழிந்து வருவதால் எதிர்கால உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில், “இந்த பூமியில் இன்னும் 60 அறுவடைகள் மட்டுமே செய்ய முடியும் என்று ஐ.நா. அமைப்புகள் தெளிவாகக் கூறியுள்ளன. இது தோராயமாக 40 முதல் 45 ஆண்டுகளுக்குச் சமம். அதன் பிறகு, உணவு உற்பத்தி செய்வது மிகவும் சவாலானதாக மாறும்.

தற்போது, நாம் இன்னும் பிறக்காத குழந்தைகளின் உணவை உண்டு கொண்டிருக்கிறோம். இதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். நாம் நம்முடைய உணவையோ அல்லது நம் குழந்தைகளின் உணவையோ உண்ணவில்லை. இன்னும் பிறக்காத குழந்தைக்குச் சொந்தமான உணவை நாம் உண்டு கொண்டிருக்கிறோம். இது நல்லதல்ல. அதனால் தயவுசெய்து செயல்படுங்கள்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு தேசத்திலும் கொள்கைகள் மாற வேண்டும். அந்தந்த நாட்டின் மண் வளத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் அமைய வேண்டும்.

மண்ணின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொள்கை வகுப்பாளர்களிடம் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் உருவாக்கிய மலேசிய மண் வளக் கொள்கையை உங்களுக்கு வழங்குகிறோம். அதனைப் பிரதமர், வேளாண்மைத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பியுங்கள்.

இதுபோன்று உலகின் 192 நாடுகளுக்கான மண் வளக் கொள்கைகளை உருவாக்க எங்களுக்கு 2 முதல் 2.5 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு நாட்டின் நில அமைப்பு, மண்ணின் தன்மை, பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இக்கொள்கைகளை உருவாக்கினோம். இவற்றை 72 முதல் 74 நாடுகள் வரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்றுக்கொண்டுள்ளன.” எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.