தமிழகத்தில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூவன் வாழை கிலோ ரூ.23 முதல் ரூ.25 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.25 முதல் ரூ.28 வரையிலும், நேந்திரன் ரூ.33 முதல் ரூ.35 வரையிலும் விற்பனையாக வாய்ப்புள்ளதாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய விவசாயத்தில் வாழை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் வாழை, விவசாயிகளின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்தியா வாழை உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நாடாக திகழ்கிறது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் 2024–25ம் ஆண்டுக்கான இறுதி மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 9.02 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டு, 383 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வாழை உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன், மொந்தன், ரஸ்தாளி, ஏலக்கி, நாடன், செவ்வாழை, கிராண்ட் நெய்ன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஈரோடு, தேனி, தூத்துக்குடி, கோவை, திருச்சி ஆகியவை முக்கிய வாழை உற்பத்தி மாவட்டங்களாக உள்ளன.

கடந்த 2024–25ம் ஆண்டில் தமிழகத்தில் 1.14 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வாழை பயிரிடப்பட்டு, 45 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வாழை விரைவில் அழுகக்கூடிய பயிர் என்பதால், வானிலை மாற்றம், சந்தைக்கு வரும் வரத்து, நுகர்வோர் தேவை ஆகியவற்றைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு மையத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, கோவை சந்தையில் பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் ஆகிய வாழை ரகங்களின் கடந்த 20 ஆண்டுகால விலை நிலவரங்களை ஆய்வு செய்தது. மேலும், உள்ளூர் சந்தைகள் மற்றும் வர்த்தகர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், சீரான வானிலை நிலவும் பட்சத்தில், 2026ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரி பண்ணை விலை நிலவரம்: பூவன் ரகத்திற்கு கிலோ ரூ. 23 முதல் ரூ. 25 வரையிலும், கற்பூரவள்ளி ரகத்திற்கு ரூ. 25 முதல் ரூ. 28 வரையிலும், நேந்திரன் ரகத்திற்கு ரூ. 33 முதல் ரூ. 35 வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.