வடகிழக்கு பருவமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடிநீர் திட்டங்களின் மோட்டார்கள் இயக்கம் தடைபட்டு, குடிநீர் வழங்கல் பாதிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பில்லூர் அணைக்கான நீர்வரத்து 3000 முதல் ஆறாயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 6000கன தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில், பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை நகராட்சி, ஊரக பகுதி குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கும் குடிதண்ணீர் கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது
மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை நகராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடி தண்ணீர் திட்டங்கள் முடங்கி உள்ளதாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ள நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகளுடன் சென்ற ஆட்சியர், பவானி ஆற்று பாலம் போன்ற இடங்களை ஆய்வு செய்தார். வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க செயல்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் தடையின்றி குடிநீர் வழங்க ஆலோசனைகளை வழங்கினார்.
