டெங்கு வைரஸ் கொண்ட பெண் கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிடும். வீடுகளில் சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டிகள் மற்றும் குடங்கள், இல்லங்கள் மற்றும் கட்டிடங்களில் தேங்கும் தண்ணீரில் இவை முட்டையிடும்.

எனவே இதை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என கோவை மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

மாநகரின் பல இடங்களில் கோவை மாநகராட்சி சுகாதார குழுவினர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றியும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள சேட் நாராயணன் வீதி பகுதியில், புதிதாக கட்டப்பட்டுவரும் குடியிருப்பு கட்டடத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது அங்கு அதிகப்படியான டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது, இதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது. டெங்கு பரவலை ஊக்குவிக்கும் படி அலட்சியத்துடன் உள்ளோர் மேல் நடவடிக்கை மாநகரில் தொடருகிறது.

இதையும் கவனியுங்க…
SAKADAI
கோவை காந்தி மாநகரில் இருந்து எப்.சி.ஐ. குடோன் நோக்கி செல்லக்கூடிய வழியில் சாலை ஓர மீன் இறைச்சி விற்பனை கடை ஒன்று செயல்படுகிறது. இந்த சாலையோர கடையிலிருந்து  குறுகிய தூரத்திற்கு குழி வெட்டி, செயற்கையாக சாக்கடை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த சாக்கடையில் சேரும்படி வழி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற புது சாக்கடைகளை சாலை ஓரங்களில் அமைந்துள்ள கடைகள் தங்கள் விருப்பம் போல ஏற்படுத்திக்கொள்கின்றன. இதை தடுக்க நடவடிக்கை தேவை.