பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிதி உருவாக்கப்படும். நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது உற்பத்தி மற்றும் சேவைத் திறனை மேம்படுத்த, இந்த நிதி நீண்ட கால பங்கு மூலதனமாக வழங்கப்படும் எனவும் சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அதே நேரத்தில் வியாழக்கிழமை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், கோவையை சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பலரிடம் இது தொடர்பாக பெரியளவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்றும், அரசு மீதான விரக்தியே மேலோங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கு ஒரு காரணம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரிகள் தொடர்பாக விவாதங்கள் எதுவும் இருக்கப் போவது இல்லை என முன்னணி நாளிதழ்களில் வெளி வந்திருக்கக் கூடிய செய்தி என்கின்றனர் விவரமரிந்தவர்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட் அமைப்பு) தலைவர் ஜேம்ஸ் அவர்களிடம் பேசியபோது :- மத்திய அரசு மற்றும் நிதியமைச்சகம் ஜி.எஸ்.டியை வருவாய் ஈட்டும் ஒரு வழியாக மட்டுமே பார்க்கிறதே தவிர, நலிவடைந்து வரும் குறுந்தொழில்களைக் காக்கும் வகையிலான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினர்.
“ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்ட காலம் தொட்டே குறுந்தொழில் நிறுவனங்கள் பல்வேறு நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 % ஆக குறைக்க வேண்டும், குறுந்தொழில்களைத் தனியாகப் பிரித்து அவை தயாரிக்கும் உற்பத்திப் பொருட்களுக்கான வரியை 5 % ஆக நிர்ணயிக்க வேண்டும் மற்றும் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டியையும் 5 % ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இத்தனை ஆண்டுகளாக இந்தக் கோரிக்கைகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏமாற்றம் ஏற்படுத்தும் ஒன்றாக தான் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
இம்முறை கூடும் ஜி.எஸ்.டி வரிகள் தொடர்பான எந்த அறிவிப்பும் இருக்கப் போவது இல்லை என வெளிவந்திருக்கக் கூடிய தகவல் தொழில் துறையினர் அனைவரையும் விரக்தி அடைய செய்துள்ளது.
