வாளையார்-காந்திபுரம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் நேரத்திற்கு முறையாக இயக்கப்படாததை கண்டித்து, நவக்கரை அருகே பொதுமக்கள் அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நவக்கரை அமைந்துள்ளது. வாளையாரில் இருந்து காந்திபுரம் வரை இயக்கப்படும் அரசு பஸ்களை நம்பி, இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் கால அட்டவணைப்படி இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் 3 முதல் 4 பஸ்கள் வரை ஒன்றன்பின் ஒன்றாக வந்து செல்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், காலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலையும், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு தாமதமாகச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பஸ் சேவை சீரற்ற முறையில் இயங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள், இன்று காலை நவக்கரை பகுதியில் வந்த அரசு பஸ்களை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். சாலையில் திரண்ட அவர்கள், அரசு போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு பஸ்களை சீராக இயக்க வேண்டும். பஸ்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக இயக்கப்படுவதை தவிர்த்து, கால அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
