பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது இந்தியாவிற்கு புதிது அல்ல. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் இந்தியா இந்த நடவடிக்கையை 2003 முதல் துவங்கி பல்வேறு கட்டங்களாக செய்து வருகிறது.

2003ல் முதலில் 5% எத்தனால் கலப்புடன் E5 வகை பெட்ரோல் சில மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் 2006ல் அனைத்து மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுவே 2022ல் 10% கலப்பு கொண்ட E10 வகை பெட்ரோல் நாடுமுழுவதும் ஜூன் 2022ல் விற்பனைக்கு வந்தது. இப்போது 20% கலப்பு கொண்ட பெட்ரோல் விற்பனையில் உள்ளது.

1 ஏப்ரல், 2026 முதல் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் 20% எத்தனால் கலப்பு செய்யப்பட்ட பெட்ரோலாக விற்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி சந்தையில் பிரீமியம் பெட்ரோல் என கருதப்படும் XP 100, SPEED 100 எனும் அதிக திறன் கொண்ட வகை பெட்ரோல் எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோல் வகைகளாக உள்ளது.

இந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இந்திய தர மேலாண்மை அறக்கட்டளையின் கருத்தரங்கில் பங்கேற்ற டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் கவுரவ தலைவர் வேணு சீனிவாசன், எந்த வகை பெட்ரோல் போடுவது தங்களுக்கு உகந்ததாக இருக்கும் என மக்களுக்கு தேர்வுகளை கொடுக்க தேவை ‘E10 வகை பெட்ரோல்’ வரை எழுந்தது இல்லை. ஆனால் E20 மேல் மக்களுக்கு எழுந்துள்ள அச்சங்களால் அவர்களுக்கு E10 அல்லது E20 பெட்ரோல் என 2 தேர்வுகளை வழங்க பரிசீலிக்கலாம் என கூறியுள்ளார்.

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையிலும் கூட இதே போன்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

அவர் இந்தியாவில் 7.5 கோடி முதல் 8 கோடி இரு சக்கர வாகனங்கள் பழைய E10 பெட்ரோல் வகைக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டவை எனவும், அவற்றில் பல வாகனங்கள் E10 வகை பெட்ரோலுக்கு மேல் உள்ள எத்தனால் கலப்பு வகைகளை ஏற்கக் கூடியவைகளாக உருவாக்கப்பட்டவை அல்ல எனவும் கூறியுள்ளார்.

மேலும் E20 வகை பெட்ரோலை பயன்படுத்தக்கூடிய வாகனங்களின் திறன் 6 முதல் 7% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது எனவும், வெறும் மைலேஜ் மட்டுமல்லாது பழைய வாகனங்களில் உள்ள ரப்பர் சீல்கள் மற்றும் எரிபொருள் கட்டமைப்பு ஆகியவையும் இந்த E20 வகை பெட்ரோலை பயன்படுத்தும் போது பாதிக்க வாய்ப்பு உள்ளது, என தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

எனவே இந்தியாவின் பெட்ரோல் பங்குகளில் E20 வகை பெட்ரோல் இருப்பது போலவே, E10 வகை பெட்ரோலும் தேவைப்படும் வாகன ஓட்டிகள் பெற்றுக் கொள்ளுமாறு நடவடிக்கைகளை கொண்டு வந்தால் அது பொதுமக்களினுடைய அச்சத்தை தணிக்க மிகவும் துணையாக இருக்கும், பழைய வாகனங்களையும் அது பாதுகாக்கும், காலப்போக்கில் பழைய வாகனங்கள் படிப்படியாக குறைந்து பொதுமக்கள் புது வாகனங்களுக்கு மாறுவார்கள் எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது சாத்தியமா? 

சாத்தியமே என்கின்றனர் நிபுணர்கள்.பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உடைய தலைவர் சஞ்சய் கண்ணா, அரசு அவ்வாறு E10 வகை பெட்ரோலை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்தால், அதை சாத்தியப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.