தவெகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘அண்ணன் சீர்’ திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி திருமணத்திற்கு, அண்ணன் சீராக 8 கிராம் தங்கமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும்.
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தவெக தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் திருமணமாகும் பெண்களுக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் அரசாணையில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், திருமணமாகும் மணப் பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்குவதற்கு நிர்வாக அனுமதியும், நிதி அனுமதியும் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
