“எனது சம்பளத்தில் ஒரு நல்ல வீடு, ஒரு கார், கஷ்டம் என்றால் கைகொடுக்க கொஞ்சம் வங்கி கணக்கில் பணம்,” இதுதான் மாத சம்பளம் வாங்கும் ஒரு சராசரி இந்திய குடிமகனின் அதிகபட்ச கனவாக இருக்கமுடியும்.
இப்படி கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வீடு கட்டும் ஒருவர், கட்டுமான பணிகளுக்கு தேவையான மண், இரும்பு கம்பி போன்றவற்றின் தரம், விலை ஆகியவற்றை மட்டும் சரிபார்ப்பது தான் நடைமுறையில் உள்ள ஒன்று.
அவரிடம் சென்று, இந்த மணல், கற்கள் இயற்கை வளங்களை சேதப்படுத்தி வந்த ஒன்றா? இந்த இரும்பு கம்பிகளை தயாரித்தபோது அந்த நிறுவனம், அதிக கார்பன் வாயுவை வெளியேற்றியதா? என்றெல்லாம் பார்த்து வாங்குங்கள் என்று சொன்னால் அவர் நம்மை பார்த்து ஒன்று சிரிப்பார், இல்லையென்றால், “யாரு சாமி நீ?” என யோசிப்பார்.
யோசிக்கிறது ஐரோப்பா!
ஆனால் இதையெல்லாம் யோசித்து தான் பொருட்களை வாங்குகின்றது ஐரோப்பிய நாடுகள். அங்கு இறக்குமதி செய்யப்படும் கட்டுமான பொருட்கள், ஜவுளி பொருட்கள் என அனைத்துமே இயற்கைக்கு சேதத்தை ஏற்படுத்தாத வகையில் (அல்லது அனுமதிக்கப்பட்ட/குறைந்த அளவில்) உள்ளதா என்பதை அவர்கள் மிகவும் கவனித்து, வாங்குகின்றனர்.
ஏற்கனவே இயற்கைக்கு போதிய சேதத்தை பல தலைமுறைகளாக தொழிற்சாலைகளும், பொதுமக்களும் செய்துவிட்டோம் என்பதால், நமது வருங்கால சந்ததிகள் கடும் வெயில், திடீர் வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு என பல்வேறு சவால்களை சந்திக்கபோகிறார்கள்.அதை மேலும் மோசமாக்கிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் பல்வேறு நாடுகள் இப்படி சிந்தித்து, அதற்கான சட்டங்களை ஏற்றி வருகின்றனர்.
சிக்கலில் 60 கோடி இந்தியர்கள்
100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது இந்தியா. இதில் 60 கோடி பேர் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கான குடிநீர் பெறுவதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசின் நிதீ ஆயோக் அறிக்கை சொல்கிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, 60 கோடி இந்தியர்கள் சிரமத்துக்குளாகின்றனர்.
தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை அரசு உணர்ந்தாலும், அதை வீணடிக்காமல் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் இன்னும் தீவிரமடையாமல் தான் உள்ளது.
சில தனியார் நிறுவனங்கள் நீரை சரியான முறையில் பயன்படுத்தியும், அவற்றை தங்களின் தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால், சுத்திகரித்து, மறுசுழற்சி செய்து வெளியேற்றுகின்றனர் என்பதை மறுக்கமுடியாது.
ஆனால் பெருவாரியான நிறுவனங்கள் நீரை பொறுப்பின்றி பயன்படுத்தவும், நீர் நிலைகளை கழிவுகளை கொட்டும் இடங்களாகவும் பார்ப்பது இந்தியாவின் எல்லா நகரங்களிலும் நடக்கும் வழக்கமான ஒரு செயலாக மாறியுள்ளது வருத்தத்திற்குரிய ஒன்று.
ஏ.ஐ.யும் தண்ணீரும்…
தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) துறையில் சாதித்த நாடுகள் இன்று ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு துறையில் கவனத்தை செலுத்தி வருகின்றன. இந்தியாவின் மும்பை, சென்னை, டில்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஏ.ஐ.க்கான பிரத்தியேக தகவல் மையங்கள் அமையவுள்ளன. ஆந்திராவில் கூகிள் அமைக்கவுள்ள மிகப்பெரிய ஏ.ஐ. தகவல் மையத்திற்கு அதானி மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உதவவுள்ளன.
இந்த மையங்களில் உருவாகும் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க மிக மிக அதிக அளவில் நீர் தேவை. எந்த அளவுக்கு என்றால் 1 மெகா வாட் திறன்கொண்ட ஒரு ஏ.ஐ. தகவல் மையத்தின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க தினசரி சுமார் 68,000 லிட்டர் நீர் தேவை என கணிக்கப்பட்டுள்ளது. இது கடல் நீராக இருக்கக்கூடாது, நல்ல தண்ணியாக தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் கருவிகள் நாளடைவில் சேதமாகிவிடும்.
1 மெகா வாட் மின் திறன் பயன்படுத்தும் ஏ.ஐ. தகவல் மையத்திற்கே தினமும் இவ்வளவு நீர் தேவை உள்ளது என்றால் 1 கிகா வாட் திறன் கொண்ட மையத்திற்கு எவ்வளவு நீர் தினமும் தேவைப்பட வாய்ப்புள்ளது தெரியுமா? 6.85 கோடி லிட்டர்!. ஆனால் கூகிள் இதை நீர் மூலம் குளிரூட்ட செய்யாமல் காற்றின்மூலம் குளிரூட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறது. எதை எப்படி குளிர்வூட்டினாலும் தாக்கம் இல்லாமல் இருக்கப்போவதில்லையே?
ஆந்திர மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களில் ஏ.ஐ. தகவல் மையங்கள் அமைய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ.யும் சுற்றுசூழலும்…
இந்தியாவின் மின்சார தேவைகளுக்கான பதில் குறைந்தது 60% நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் கிடைக்கின்றன. இந்த நிலையில், மின்சாரத்தை அதிகம் உட்கொள்ளும் ஏ.ஐ. வளாகங்களால் மின்தேவை அதிகரிக்கும். மின்தேவை அதிகரித்தால் நிலக்கரி பயன்பாடு அதிகரிக்கும். இது அதிகரித்தால் என்னவாகும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்.
வரும் டிஜிட்டல் புரட்சி ஏ.ஐ. மூலமாக தான் நடக்கப்போகிறது என்பதால் இதன் மேல் பெரும் கவனத்தை இந்தியா போன்ற நாடுகள் செய்துவருகின்றன. இந்த துறையில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்க்க நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஐ. தகவல் மையங்களுக்கு பெருமளவில் நிலம் தேவை என்பதால் அவற்றை இதற்கான திட்டங்கள் அமையவுள்ள மாநில அரசாங்கங்கள் கையகப்படுத்தி வருகின்றன.
ஆந்திராவில் கூகிள் நிறுவனத்தின் ஏ.ஐ. தகவல் மையம் அமைய தேர்வான இடத்தில் திட்டத்திற்கான சுற்றுசூழல் ஒப்புதல் வெறும் 9 நாட்களில், கருத்துகேட்பு எதுவுமின்றி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அமையவுள்ள கூகிள் நிறுவனத்தின் 1 ஏ.ஐ. தகவல் மையம் வனப்பகுதிக்கு அருகே அமைகிறது. இருந்தபோதும் ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றது.
இதுமட்டுமல்ல ரிலைன்ஸ் நிறுவனம் ஆந்திராவில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் 1 கிகா வாட் திறன் கொண்ட ஏ.ஐ. தகவல் மையத்தை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளது.
உலக அளவில் ஏ.ஐ. தகவல் மையங்களுக்கு எதிர்ப்பு
55% முதல் 75% அமெரிக்கர்கள் ஏ.ஐ. தகவல் மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாக உள்ளனர் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாங்கள் இந்த தொழில்நுட்பங்களை கண்டு மகிழ்ச்சி அடைவதை விட பயந்து போய் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பாவில் ஏ.ஐ. தகவல் மையங்களுக்கு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டும் 70 மையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.
ஸ்பெயின் நாட்டில் ஏ.ஐ. தகவல் மையங்கள் அமைக்க 80% மின்சாரம் சோலார், காற்றாலை போன்ற வழிகள் மூலம் பெறவேண்டும் என்பது கொள்கையாக அறிவிக்கப்படவுள்ளது.
தென் கொரியாவில் ஏ.ஐ. தகவல் மையங்கள் தொடர்பாக ஒப்புதல் பெற திட்டம் அமையும் இடத்தின் 200 மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஒப்புதல் பெறுவது அவசியமாக்கப்படவுள்ளது.
நாம் செய்யவேண்டியது என்ன?
இன்று ஏ.ஐ.க்கென தனி அமைச்சகம் கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. தமிழ் நாட்டில் ஏ.ஐ. டேட்டா சென்டர்கள் நிறுவவேண்டும் என்றால் குறைந்தது 60% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க கூடிய வழிமுறைகளில் தான் பெறவேண்டும், விவசாய நிலங்கள் அருகேயே, வனங்கள் அருகேயே அமைக்கப்படக்கூடாது, அதிக இரைச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை பயன்படுத்தவேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும்.
பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தினுடைய, இயற்கையினுடைய அழிவில் இருந்து பிறப்பதாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது வளர்ச்சியாக இருக்காது.
