நாளை தாராபுரத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவிநாசி சாலை, திருச்சி சாலை வழியாக தாராபுரம் செல்கிறார். இதையொட்டி, முதல்வர் பயணிக்கும் சாலை மற்றும் கோவை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், கோவை விமான நிலையத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல்வர் விஜய் கோவை வந்தபோது விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் நெருக்கடி மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, இந்த முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரள வாய்ப்புள்ளதால், முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.