ஐ.டி. நிறுவனங்கள் என்பவை தமிழகத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஐ.டி. துறையின் வளர்ச்சி எந்தளவு கைகொடுத்தது, அதை போல ஜி.சி.சி. எனப்படும் உலக திறன் மையங்களும் வளர்ச்சியை கொடுக்கக்கூடியவை.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சொந்த ஜி.சி.சி (உலக திறன் மையம்) இந்தியாவின் ஒரு நகரத்தில் நிறுவப்பட்டால், அந்த மையத்தில் இருந்து அந்த நிறுவனத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு தேவையான முக்கிய பணிகள் தொடர்பான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க முடியும்.

இன்று உலக அளவில் இந்தியா ஜி.சி.சி. மையங்கள் நிறுவப்பட உகந்த இடமாக அறியப்படுகிறது. இந்தியாவின் எந்த ஒரு நகரத்தில் திறமைமிக்க இளம் மாணவர்கள் & இளைஞர்கள், சீரான சாலை – விமான போக்குவரத்து, கணினி மற்றும் பொறியியல் துறையில் மேம்பட்ட படைப்பாற்றல், தொழில்துறையுடன் இனைந்து பயணிக்கும் கல்வி நிறுவனங்கள், முதல் தர இடவசதி மற்றும் தொழில் செய்ய உகந்த சூழல் ஆகியவை கிடைக்கிறதோ, அங்கு ஜி.சி.சி. வலுவாக கால்பதிக்கும்.

இவை அனைத்தும் கோவையில் கிடைப்பதால், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஜி.சி.சி மையங்கள் இங்கு துவங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஆற்றக்கூடிய தொழில் அமைப்புகளில் ஒன்று சி.ஐ.ஐ. எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு. கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவும் என கணித்த இந்த அமைப்பு, அதை மெய்ப்பட செய்ய என்ன வழிகாட்டுதல்கள், வசதிகள் தேவை என்பதை உலகின் முன்னணி சேவை நிறுவனமான இ.வை. (EY) உடன் இணைந்து ஆய்வறிக்கையாக வெளிகொண்டுவந்துள்ளது.

இன்று கோவையில் 75 ஜி.சி.சி மையங்கள் உள்ளன. இதை 2032ம் ஆண்டில் 200 ஆக உயர்த்த என்னவெல்லாம் செய்யவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் முதலாவதாக கோவையிலிருந்து வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு நேரடி விமான சேவை வசதிகள் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் உலகின் மிக முக்கிய ஜி.சி.சி தலைமை மண்டலங்கள் இங்கு உள்ளதால் இந்த பகுதிகளுக்கு நேரடி விமான சேவைகள் என்பது அவசியம் ஆகிறது.

கோவையில் பணி புரியும் மூன்று லட்சம் அளவிலான ஐடி பணியாளர்களில் 50 சதவீதம் பேர் மூத்த அளவில் பணிபுரியக்கூடிய திறன் பெற்றவர்களாக இருந்தாலும் அதிநவீன ஏ.ஐ., சைபர் செக்யூரிட்டி, உள்ளிட்ட பிற பிரிவுகளில் நிபுணத்துவம் என்பது குறைவாக உள்ளது. எனவே இந்த இடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜி.சி.சி நிறுவனங்களுக்கு தேவையான தலைமை நிலை அதிகாரிகள் கண்டறியப்பட வேண்டும், ஜி.சி.சி. மையங்களுக்கான தேவைகள் அதிகரித்து வருவதால் இதுபோன்ற மையங்களுக்கான முதல் தர, நவீன அலுவலக கட்டமைப்புகள் தேவை.

இந்த அலுவலகங்கள் அமையும் இடங்களிலிருந்து சீரான போக்குவரத்து வசதிகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஏற்கனவே உள்ள ஜி.சி.சி மையங்களில் 60% பொறியியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேலாண்மையில் கவனம் செலுத்துவதற்காக செயல்படும் நிலையில், இத்துடன் வளர்ந்து வரக்கூடிய பிற தொழில்நுட்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கக்கூடிய ஜி.சி.சி மையங்களும் உருவாக வேண்டும்.

முக்கியமாக 2032 ஆம் ஆண்டுக்குள் 200 ஜி.சி.சி மையங்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த குறிக்கோளுடன் இயங்கும் ஒருமை பட்ட நிர்வாக கட்டமைப்பு அவசியம். இதற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு, கொடிசியா மற்றும் ஜி.சி.சி துறை தலைவர்கள் கொண்ட ஒற்றை அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, முதலீடு செய்ய வைக்கும் பணியை, தமிழக அரசின் ‘கைடன்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நிறுவனம் மேற்கொள்கிறது.

ஜி.சி.சி இலக்குகளை அடைய இதற்கான முதலீடுகள் தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசின் தொழில்துறை, ‘கைடன்ஸ்’ அமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இலக்குகளை நிறைவேற்ற தேவையான பணியாளர்கள் கிடைக்க உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் செயல்படவேண்டும். துறை சார்ந்த நிபுணர்கள், தலைவர்கள் கிடைக்க ஜி.சி.சி துறை வல்லுநர்களின் ஆலோசனைகள் அவசியம். இதன் மூலம் எதிர்கால திறன் தேவைகள் தடைபடாமல் கிடைக்கும்.

கோவை மாநகராட்சி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் சிப்காட் மூலமாக முதல் தர அலுவலகங்கள் தேவைகளை நிறைவேற்ற சாத்தியங்களை வேகமாக ஆராய்வது அவசியம். இதுபோன்ற சில முக்கிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜி.சி.சி துறையில் கோவையின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இந்த அறிக்கை உதவும் என பரவலாக கருதப்படுகிறது.