கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, அமைச்சர் சம்பத்குமார்   தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 22.09.2026 முதல் 28.09.2026 வரை கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 2,647 ஆகும்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,713 குழந்தைகளும், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 599 குழந்தைகளும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 305 குழந்தைகளும், வால்பாறை அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகளும் பிறந்துள்ளன. மொத்தம் 2,647 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சம்பத்குமார், குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நினைக்கக்கூடிய உறவு தான் தாய்மாமன்,

கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று 2,647 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இனி நான்கு மண்டலங்களிலும் தினமும் 25 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான தங்க மோதிரங்கள் இரும்புப் பெட்டகங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 24 மணி நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் குறைபாடுகள் உள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு,  கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கண்டறியப்படும் பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கோவை அரசு மருத்துவமனையின் பார்க்கிங் வசதி குறித்த கேள்விக்கு, மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், மருத்துவமனைக்கு வரக்கூடியவர்கள் மருத்துவமனை அடையாள அட்டை வைத்திருந்தால் கட்டணமில்லாமல் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.