இந்திய மருந்தியல் சங்கம் கோவை கிளை மற்றும் கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரி இணைந்து, உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் பாதிப்பு விழிப்புணர்வு பேரணியை கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 300-க்கும் மேற்பட்ட மருந்தியல் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
பேரணியின் போது, தகுதி வாய்ந்த மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை நேரடியாக வாங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில்: ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டபடி தவறாகப் பயன்படுத்துவதை நாம் இன்று தடுத்து நிறுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் சிறிய அளவிலான தொற்று பாதிப்புகள் கூட உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்று வலியுறுத்தினார்.

கல்லூரியின் முதல்வர் ராஜசேகரன் பேசுகையில்: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுய மருத்துவம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த முழு மருந்து அளவையும் முழுமையாக உட்கொள்ள வேண்டும் என்றார்.
