வழக்கமாக திருமணத்திற்கு வரன் தேடும் முறைகளை தாண்டி, இணையதளம் வழியாகவும் வாழ்கை துணையை தேடுவது இயல்பாகி உள்ளது. இந்நிலையில் இதைக்கொண்டும் சைபர் மோசடிகள் கோவையில் நடக்கிறது என்பது இப்போது மக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
வரன் தேடுவோர் பயன்படுத்தக்கூடிய ‘மேட்ரிமோனி’ என்றழைக்கப்படும் இணையதளங்கள் மூலம் சமீபத்தில் திருமணத்திற்கு வரன் தேடும் கோவை மாநகரத்தை சேர்ந்த சுமார் 30 பேர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும், மாவட்ட அளவில் உள்ள கிராம பகுதிகளில் 25 புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை தவிர கடந்த 9 மாதங்களில் கோவை மாவட்ட கிராம பகுதிகளில் பிற சைபர் குற்றங்கள் (ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, வாடிக்கையாளர் சேவை, வங்கி கணக்கு தொடர்பான விவரங்கள் சரிபார்ப்பு அழைப்பு) தொடர்பாக 118 வழக்குகள் பதிவு ஆகி உள்ளன. இதில் 100 வழக்குகள் கடந்த 3 மாதங்களில் மட்டும் பதிவு ஆகி உள்ளது. இது தொடர்பாக 25 பேர் கைதாகி உள்ளனர், ரூ.2.10 கோடி மீட்கப்பட்டுள்ளது.
‘மேட்ரிமோனி’ மோசடிகள் நடைபெறும் விதம்
40 வயதுக்கு மேல் திருமணம் ஆகாமல் ‘மேட்ரிமோனி’ மூலம் வரம் தேடும் நபர்கள் தான் இந்த மோசடி கும்பலின் குறி. இதுபோல் வரன் தேடும் ஒருவரை முதலில் அந்த கும்பல் தேர்வு செய்து, தங்களது கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொள்ள விருப்பம் என பேசவைப்பார்கள்.
பேச்சு, வீடியோ அழைப்பாக பின்னர் மாறும். பல மாதங்கள் இந்த உறவு நீடிக்கும். இதனால் அந்த ஆணுக்கும் தனக்கு வாழக்கையில் ஒரு துணை கிடைக்கப்போகிறது என நம்பிக்கை கிடைக்கும். திருமணத்திற்கு நிதியை திரட்டுகிறார் என அறிந்துகொண்டு, “நீங்கள் ஏன் எதிலாவது முதலீடு செய்யக்கூடாது?” என தனக்கு சாதகமான வழியில் அந்த மோசடி பெண், அந்த அப்பாவி நபரை முதலீடு செய்ய தூண்டுவார். பணம் முதலீடு ஆனதும் உறவு முறிந்துவிடும்.
இதுபோன்ற செயல்களால் அந்த ஆண் நிதி ரீதியாக மட்டுமல்லாது மனம் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுவார். சிலர் துணிந்து புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே ‘மேட்ரிமோனி’ இணையதளங்களை தேர்வு செய்யும் போது மிக கவனமாக தேர்வு செய்யவேண்டும். தான் தரும் தகவல்களை அப்படியே பிறருக்கு வழங்கும் தளங்களா அல்லது இந்த இணையதளத்தை பயன்படுத்துவோரின் விவரங்களை பாதுகாத்து, முறையாக சரிபார்க்கப்பட்ட பிற பயனாளர்களுக்கு மட்டும் வழங்கும் இணையதளமா என்பதை கவனித்து, அதில் தகவல்களை பதிவிடவேண்டும்.

