தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவிற்கும், ஒரே இணையதளம் மூலம் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண்பாடப்பிரிவுகளுக்கும் இணைய விண்ணப்பத்தின் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2,516 இடங்களுக்கும், அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் 3,051 இடங்களுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பிரிவில் 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. இதனையொட்டி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.
நிகழ்வில் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் ரவீந்திரன், மாணவர்களை வரவேற்று வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்கள் வேளாண்மையில் கொண்டிருக்க வேண்டிய ஈடுபாடுகள் குறித்து அறிவுறுத்தினார்.
