புதுக்கோட்டை மாவட்டத்தில் டிம்பர் மரங்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மரம் தங்கசாமி.

Organic farmer Maram thangasamy scaled

தனது வாழ்நாள் முழுவதும் டிம்பர் மர சாகுபடியை பிரபலப்படுத்தியவர். மரம் சார்ந்த விவசாயம் காலத்தின் கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றியவர். ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து பலகாலமாக செயல்புரிந்தவர்.

அவரது நினைவு நாளான செப்டம்பர் 16 அன்று மரங்கள் நடுவதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 111 விவசாய நிலங்களில், 497 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,10, 906 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, கோவை மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்திகேயன் என்பவரின் நிலத்தில் 1500 நாட்டு மரங்கள் நடப்பட்டன.

13.3 கோடி மரங்கள் நட்ட ‘காவேரி கூக்குரல்’

ஈஷாவின் தொடர் முயற்சிகளின் மூலம் தோராயமாக 13.3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் நோக்கில், பேரூர் மற்றும் தருமை ஆதீனங்களுடன் இணைந்து அரச மரக்கன்றுகள் நடும் பணியையும் ‘காவேரி கூக்குரல்’ செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 1.20 கோடி மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 39,37,000 மரங்கள் நடப்பட்டுள்ளன.

மரம் சார்ந்த விவசாயத்திற்கு ஊக்குவி ஊக்குவிப்பு!

மரம் சார்ந்த விவசாயம் செய்யவிரும்பும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை காவேரி கூக்குரல் செய்து வருகிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற டிம்பர் மரங்களை விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்கி மர விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறது. இந்த டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

மேலும், மரங்களை வெட்டாமலே வருமானம் தரக்கூடிய வழிமுறைகளையும் காவேரி கூக்குரல் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கிறது. டிம்பர் மரங்கள் 3 முதல் 5 வருடங்கள் வளர்ந்தபின், சமவெளிப் பகுதிகளில் காய்க்கக்கூடிய கரிமுண்டா மற்றும் பன்னியூர் மிளகு ரகங்களை ஊடுபயிராக மரங்களின் மீது வளர்ப்பதன் மூலம் தொடர் வருமானம் பெறமுடியும். ஈஷா மூலம் பயிற்சி பெற்ற எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு மூலம் வருமானம் பெறுகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், ஜாதிக்காய் மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி குறித்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணைகளில் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரக்கன்றுகளைப் பெறவும், மண்ணுக்கேற்ற மரங்கள் குறித்த ஆலோசனைகள் பெறவும், காவேரி கூக்குரல் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.