தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பழைய பட்டுச் சேலைகளைக் கொடுத்து புதிய ஆடைகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக ஆர்வம் எழுந்துள்ளது.
இதுபற்றி மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தினர் கூறியதாவது:
பட்டு புடவைகளில், குறிப்பாக, காஞ்சிபுரம் பட்டு புடவைகளில் வெள்ளி ஜரிகை பின்னப்படும். இவ்வாறு பழைய பட்டு சேலைகளில் பின்னப்பட்டுள்ள வெள்ளி ஜரிகைகளை தரமதிப்பீடு செய்ய நமது கிளையில் மதிப்பீட்டாளர் உள்ளார்.
வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் சேலையில் உள்ள ஜரிகை ஒரிஜினல் வெள்ளியா என்பதை தெரிந்துகொள்ள நமது மதிப்பீட்டாளர் ஜரிகையின் தரத்தைப் பரிசோதிப்பார். பின்னர் அதற்கேற்ப தொகையை நிர்ணயிப்பார். மதிப்பீட்டு தொகையைக் கொண்டு, கோ-ஆப்டெக்ஸ் வழங்கும் வழக்கமான தள்ளுபடியுடன் சேர்த்து புதிய ஆடைகளை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய சேலைகள் கிழிந்திருந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்படும். பல ஆண்டுகளுக்கு முந்தைய சேலையாக இருந்தாலும் ஏற்கப்படும். ஜரிகை தான் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் கொண்டது.
இச்சலுகை தற்போது தீபாவளி பண்டிகை வரை நடைமுறையில் இருக்கும் என்றும், வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இதில் பட்டுத் துணிக்கு மதிப்பு கணக்கிடப்படுவதில்லை).
பட்டின் விலை உயர்ந்துள்ளது!
கூலி விலை உள்பட பல காரணங்களால் பட்டு புடவைகளின் விலை தற்போது உயர்ந்து உள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தூய பட்டு புடவைகளின் துவக்க விலை தள்ளுபடி போக ரூ. 8000 முதல் ரூ.9000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
