தமிழக அரசு சார்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கு புதிய கூலியை வழங்க வேண்டும் என நெசவாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது: வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.77.64 கோடி சலவை செய்யப்பட்ட இரண்டு மீட்டர் வேஷ்டிகள், 1.77.22 கோடி வெள்ளி மற்றும் தங்க நிறம் கொண்ட ஜரிகை பார்டரில் 5.50 மீட்டர் சேலைகள் வழங்கப்பட உள்ளன. புதிய வடிவம், வண்ணம் மற்றும் தரத்தில் வழங்கப்பட உள்ள இப்பொருட்களுக்கான உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்க வேண்டும்.

கடந்த காலங்களை போல இல்லாமல் இவ்வாண்டு புதிய தரத்தில் வேஷ்டி, சேலை உற்பத்தி செய்யப்படுவதால் அதற்கேற்ப கூலியை தமிழக அரசு விரைவில் அறிவிக்க வேண்டும். குறிப்பாக பிக் ஒன்றுக்கு 18 பைசா வழங்க வேண்டும். புதிய கூலியை நிர்ணயம் செய்வதுடன், அவற்றை முழுமையாக வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு வேஷ்டி 6,63,75,000 மீட்டர் உற்பத்தி செய்வதற்கு பதில் அதற்கு முன்னுரிப்பு போக 9,74,71,000 மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. சேலை 1,06,000005.5 மீட்டர் உற்பத்தி செய்வதற்கு பதில் முன்னிரிப்பு போக 5,83,00,000 மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வேஷ்டிக்கு பிக் ஒன்றுக்கு 11 பைசா, சேலைக்கு பிக் ஒன்றுக்கு 12.30 பைசா கூலி வழங்கப்பட்டது.

இந்தாண்டு வேஷ்டியின் தரம் மற்றும் திடம் உயர்த்தப்பட்டுள்ளதால் மின்சாரம், தொழிலாளர்களுக்கு ஊதியம், மூலப்பொருட்கள் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள 5 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் செப்டம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அக்குழு வழங்கும் அறிக்கையை அரசு பரிசீலனை செய்து விரைவில் கூலி உயர்வு வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என நெசவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.