ரத்தினம் பல்கலைக்கழகம், தமிழக அரசின் மலைவாழ் மக்களின் நலவாழ்வுத்துறை, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து மலைவாழ் மற்றும் சுய உதவிக்குழு மகளிருக்கான ஒருநாள் சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி, ரத்தினம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 50 மகளிர் கலந்து கொண்டனர். மூலிகைப் பொருட்கள் மூலம் வாசனைப் பொருட்கள், மருந்துகள், அழகு சாதனங்கள் தயாரித்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் ஆகியன பற்றி களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு தொழில் அமைப்புகளின் ஆரம்ப நிலை செயல்பாடுகள், பொருள் உருவாக்கம், மதிப்பு கூட்டுதல், சந்தை முறைகள், நிதி உதவி வாய்ப்புகள் ஆகியன பற்றி பயிற்சியும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியை வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவன இயக்குனர் கோவிந்தராஜன், மாவட்ட மலைவாழ் மக்கள் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் மணிமேகலை, உயிரி அறிவியல் துறை டீன் சூரியராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். பல்கலை பதிவாளர் கிருஷ்ணராஜ் பயிற்சியை துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி தங்களுக்கு புதிய வாய்ப்புகளையும் தொழில் முறைகளையும் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மகளிர் தொழில் முனைவோர் தெரிவித்தனர்.
